Refugee Tamil Initiative · a project of the Center for Peace Canada இலவசம் · இரகசியம் · தமிழ் / English · 1225 Kennedy Rd, Scarborough, ON
அகதி தமிழ் Refugee Tamil · Center for Peace Canada உதவி பெற

முகப்பு வழிகாட்டி அகதி கோரிக்கை நடைமுறை

கட்டம் 1

அகதி கோரிக்கை நடைமுறை — எளிய தமிழில்

கனடாவில் அகதி பாதுகாப்பு என்றால் என்ன, யார் கோரிக்கை செய்யலாம், நடைமுறை எவ்வாறு நகர்கிறது, மற்றும் உங்கள் கோரிக்கையைக் கையாளும் மூன்று அரசாங்க அமைப்புகள் யாவை என்பதை இந்தப் பக்கம் விளக்குகிறது.

10 நிமிட வாசிப்பு

அகதி என்பவர் யார்?

குறிப்பு

அகதி கோரிக்கை செய்வதற்கு முன், அது உங்களுக்குச் சிறந்த வழியா என்பதைத் தெரிந்துகொள்ள சட்ட ஆலோசனை பெறுங்கள். அகதி கோரிக்கை செய்வதன் மூலம், வேறு சில குடிவரவுத் திட்டங்களை நீங்கள் பயன்படுத்த முடியாமல் போகலாம்.

உங்கள் சொந்த நாட்டில் நீங்கள் பாதுகாப்பாக இல்லை என்றால், கனேடிய அரசாங்கம் உங்களை அகதியாகக் கருதுகிறது. நீங்கள் திரும்பிச் சென்றால், நீங்கள் யார் என்பதற்காக அல்லது நீங்கள் எதை நம்புகிறீர்கள் என்பதற்காக, உங்களுக்குத் தீங்கு ஏற்படலாம் அல்லது உங்கள் சுதந்திரம் பறிக்கப்படலாம். நீங்கள் வேறு ஒரு இடத்தில் வாழ வேண்டிய நிலையில் இருக்க வேண்டும்.

கனடாவில் அகதி பாதுகாப்பு கோருவது அகதி கோரிக்கை செய்தல் எனப்படும். உங்கள் நாட்டில் நீங்கள் மோசமாக நடத்தப்பட்டிருந்தாலும், அல்லது அது ஆபத்தான இடமாக இருந்தாலும், கனடாவில் தங்க அனுமதி கிடைக்கும் என்பது உறுதி அல்ல. நீங்கள் சமவாய அகதி (Convention Refugee) அல்லது பாதுகாப்பு தேவைப்படும் நபர் (Person in Need of Protection) என்பதை நிரூபிக்க வேண்டும்.

சமவாய அகதி — Convention Refugee

சமவாய அகதியாக இருக்க, கீழ்க்கண்ட ஆறு வாக்கியங்களும் உங்களுக்குப் பொருந்த வேண்டும்:

  1. நான் என் நாட்டிற்குத் திரும்பினால், மிக மோசமாக நடத்தப்படுவேன்.
  2. நான் யார் என்பதற்காக, அல்லது நான் எதை நம்புகிறேன் என்பதற்காக, அவ்வாறு நடத்தப்படுவேன்.
  3. திரும்பிச் செல்வதற்கு எனக்கு உண்மையிலேயே பயம் உள்ளது.
  4. என் நாட்டில் வாழ்வதற்குப் பயப்பட எனக்கு நியாயமான காரணம் உள்ளது.
  5. என் அரசாங்கத்தால் என்னைப் பாதுகாக்க முடியாது.
  6. அந்த நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் நான் பாதுகாப்பாக, நியாயமான முறையில் வாழ முடியாது.

பாதுகாப்பு தேவைப்படும் நபர் — Person in Need of Protection

“பாதுகாப்பு தேவைப்படும் நபர்” என்பதை நிரூபிக்க, கீழ்க்கண்ட 1 அல்லது 2 உண்மையாக இருக்க வேண்டும்:

1.

நான் என் நாட்டிற்குத் திரும்பினால், அதிகாரத்தில் உள்ளவர்கள் என்னைச் சித்திரவதை செய்வார்கள்.

அல்லது · OR

2.

நான் என் நாட்டிற்குத் திரும்பினால், நான் இறக்க நேரிடலாம், அல்லது கொடூரமான நடத்தை அல்லது தண்டனையை எதிர்கொள்ளலாம் — மேலும் (AND) கீழ்க்கண்ட அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டும்:

  • என் அரசாங்கத்தால் என்னைப் பாதுகாக்க முடியாது.
  • அந்த நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் நான் பாதுகாப்பாக, நியாயமான முறையில் வாழ முடியாது.
  • இந்த ஆபத்து எனக்கு உள்ளது — ஆனால் அந்த நாட்டில் உள்ள அனைவருக்கும் இதே ஆபத்து இல்லை.
  • கனடாவில் குற்றமாகக் கருதப்படும் ஒன்றைச் செய்ததற்காக என் நாடு என்னைத் தண்டிக்க விரும்புவது மட்டுமே இந்த ஆபத்துக்குக் காரணம் அல்ல.
  • என் நாட்டில் சுகாதார சேவைகள் போதாமல் இருப்பது மட்டுமே இந்த ஆபத்துக்குக் காரணம் அல்ல.
மேலும் அறிய

இந்த வரையறைகள் சட்டரீதியானவை; ஒவ்வொரு சொல்லுக்கும் குறிப்பிட்ட பொருள் உண்டு. உங்கள் நிலைமை எந்த வரையறைக்குள் வருகிறது என்பதை ஒரு வழக்கறிஞர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆலோசகருடன் சேர்ந்து பரிசீலியுங்கள்.

நான் அகதி கோரிக்கை செய்ய முடியுமா?

தெரிந்துகொள்ளுங்கள்

அகதி கோரிக்கை செய்ய அனுமதி கிடைப்பது என்பது, உங்களுக்கு அகதி பாதுகாப்பு வழங்கப்படும் என்று அர்த்தம் அல்ல. அவை இரண்டு வெவ்வேறு முடிவுகள்.

நீங்கள் அகதி கோரிக்கை செய்யத் தகுதியுடையவரா என்பதைக் கனேடிய அரசாங்கம் தீர்மானிக்கும். பாதுகாப்பு கோருவதற்கு முன் சட்ட ஆலோசனை பெறுவது முக்கியம்.

யாருக்கு அனுமதி மறுக்கப்படலாம்

கீழ்க்கண்ட நிலைமைகளில் உங்களால் கனடாவில் அகதி கோரிக்கை செய்ய முடியாமல் போகலாம்:

  • நீங்கள் செல்லக்கூடிய வேறு ஒரு நாட்டில் நீங்கள் ஏற்கனவே சமவாய அகதியாக (Convention refugee) அங்கீகரிக்கப்பட்டிருந்தால்.
  • நீங்கள் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்தில் ஏற்கனவே அகதி கோரிக்கை செய்திருந்தால்.
  • நீங்கள் அகதி கோரிக்கை செய்ய முடியாது என்று கனடா ஏற்கனவே உங்களுக்குத் தெரிவித்திருந்தால்.
  • கனடாவில் நீங்கள் செய்த ஒரு கோரிக்கை திரும்பப் பெறப்பட்டிருந்தால், கைவிடப்பட்டிருந்தால் அல்லது நிராகரிக்கப்பட்டிருந்தால்.
  • நீங்கள் ஆபத்தானவர் அல்லது குற்றவாளி எனக் கண்டறியப்பட்டிருந்தால், அல்லது மனித உரிமைச் சட்டங்களை மீறியிருந்தால்.
  • கனடாவில் பாதுகாக்கப்பட்ட நபர் (protected person) என்ற அந்தஸ்து உங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தால்.
  • கனடாவை விட்டு வெளியேறும்படி உங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால்.
  • அமெரிக்கா–கனடா தரை எல்லையில், பாதுகாப்பான மூன்றாம் நாட்டு ஒப்பந்தம் (STCA) காரணமாக உங்களால் உள்ளே நுழைய முடியாமல் போயிருந்தால்.

பாதுகாப்பான மூன்றாம் நாட்டு ஒப்பந்தம் (STCA)

நீங்கள் அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் நுழைந்தால், கனடா–அமெரிக்கா இடையிலான Safe Third Country Agreement (STCA) என்ற ஒப்பந்தம், அகதி பாதுகாப்பு கோருவதைக் கடினமாக்குகிறது. நீங்கள் முதலில் நுழையும் பாதுகாப்பான நாட்டிலேயே கோரிக்கை செய்ய வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் கருத்து.

அதிகாரப்பூர்வ எல்லைக் கடவைப் புள்ளியில் நீங்கள் கனடாவிற்குள் நுழைந்தால், அல்லது அதிகாரப்பூர்வ கடவைப் புள்ளிகளுக்கு இடையே நுழைந்து, நுழைந்த 14 நாட்களுக்குள் அகதி கோரிக்கை செய்தால், இந்த ஒப்பந்தம் உங்களுக்குப் பொருந்தும்.

தரை வழியாக வந்தால் — விதிவிலக்குகள்

தரை வழியாக நுழைந்தால், கீழ்க்கண்ட நிலைமைகளில் மட்டுமே நீங்கள் கோரிக்கை செய்ய முடியும்:

  • கனடாவில் உங்களுக்கு ஒரு குடும்ப உறுப்பினர் இருக்கிறார்.
  • நீங்கள் 19 வயதுக்குட்பட்ட சிறுவர்/சிறுமி, தனியாகப் பயணிக்கிறீர்கள், அமெரிக்காவில் உங்களுக்குப் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் இல்லை.
  • உங்களிடம் செல்லுபடியாகும் கனடிய விசா, அல்லது படிப்பு அல்லது வேலை அனுமதிப் பத்திரம் உள்ளது.
  • அமெரிக்காவில் அல்லது உங்கள் நாட்டில் நீங்கள் மரண தண்டனையை எதிர்கொள்கிறீர்கள்.
  • நீங்கள் நாடற்றவர் (stateless).
  • நீங்கள் அமெரிக்கக் குடிமகன்.

இந்த விதிவிலக்குகளில் ஒன்று உங்களுக்குப் பொருந்துகிறதா என்பதை அறிய, எல்லை அதிகாரி உங்களிடம் கேள்விகள் கேட்பார். பொருந்தினால், கனடாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவீர்கள். பொருந்தவில்லை என்றால், நீங்கள் அமெரிக்காவிற்குத் திருப்பி அனுப்பப்படலாம். முடிந்தால், கனடாவில் தங்குவதற்கான வேறு வழிகள் பற்றி ஒரு வழக்கறிஞரிடம் அல்லது சட்டப் பிரதிநிதியிடம் பேசுங்கள்.

அகதி கோரிக்கை நடைமுறை — ஒரு பார்வையில்

குறிப்பு

உங்கள் அகதி கோரிக்கைக்கு ஒரு வழக்கறிஞர் அல்லது சட்டப் பிரதிநிதியின் உதவியைப் பெறுங்கள். Legal Aid அல்லது இலவச சட்ட மையம் (legal clinic) மூலம் குறைந்த கட்டணத்தில் அல்லது இலவசமாக வழக்கறிஞர் கிடைக்கக்கூடும்.

கனடாவில் தங்க வேண்டுமானால், கனடா அகதி என வரையறுப்பதற்குள் நீங்கள் வருகிறீர்கள் என்பதை அரசாங்கத்திற்கு நிரூபிக்க வேண்டும் — அதாவது நீங்கள் சமவாய அகதி அல்லது பாதுகாப்பு தேவைப்படும் நபர் என்பதை. ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளில் உங்களுக்கு அந்தஸ்து இருந்தால், ஒவ்வொரு நாட்டிலும் உங்களுக்கு ஆபத்து உள்ளது என்பதைக் காட்ட வேண்டும். நீங்கள் யார், உங்கள் கதை என்ன என்பதில் நீங்கள் உண்மை பேசுகிறீர்கள் என்பதையும் நிரூபிக்க வேண்டும். ஆதாரங்களைச் சேகரிப்பதன் மூலமும், நடந்தவற்றை நேர்மையாகவும், தெளிவாகவும், விரிவாகவும் சொல்வதன் மூலமும் இதைச் செய்கிறீர்கள்.

The claim, end to end · நடைமுறையின் பாதை

நீங்கள் கனடாவில் இருக்க வேண்டும் IRCC உள்நாட்டில் ஆன்லைன் விண்ணப்பம் CBSA எல்லை · விமான நிலையம் · தடுப்பு மையம் தகுதி பரிசீலனை (eligibility) IRB-RPD விசாரணை (hearing) ஏற்கப்பட்டது → நிரந்தர வதிவிட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது → மேல்முறையீடு (RAD)

வரைபடத்தைப் பார்க்க பக்கவாட்டில் நகர்த்துங்கள்.

உங்கள் கோரிக்கையைத் தொடங்குதல்

முதல் படி — உங்களுக்குப் பாதுகாப்பு தேவை என்பதைக் கனேடிய அரசாங்கத்திற்குத் தெரிவிப்பது. இதற்கு இரண்டு வழிகள் உள்ளன. நீங்கள் கனடாவிற்குள் இருக்க வேண்டும்.

  • நீங்கள் கனடாவிற்குள் இருந்தால்: IRCC போர்ட்டலில் உங்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்பிச் சமர்ப்பிக்கவும்.
  • நீங்கள் எல்லையில், விமான நிலையத்தில் அல்லது தடுப்பு மையத்தில் இருந்தால்: அகதி கோரிக்கை செய்ய விரும்புகிறீர்கள் என்பதை CBSA அதிகாரியிடம் தெரிவிக்கவும்.

நீங்கள் கனடாவில் அகதி கோரிக்கை செய்யத் தகுதியுடையவரா என்பதை CBSA அல்லது IRCC தீர்மானிக்கும். தகுதியுடையவராக இருந்தால், உங்கள் கோரிக்கை IRB-RPD-க்கு அனுப்பப்படும்.

உங்கள் அகதி விசாரணை

உங்கள் கோரிக்கை குறித்து ஒரு விசாரணை நடைபெறும். விசாரணையின் போது, IRB-RPD-ஐச் சேர்ந்த ஒரு உறுப்பினர் (Member) உங்கள் கதையையும், உங்கள் சாட்சிகள் சொல்வதையும் கேட்பார். உங்கள் BOC படிவம், IRCC அல்லது CBSA-இன் குறிப்புகள், மற்றும் நீங்கள் வழங்கிய பிற ஆவணங்கள் அனைத்தையும் அவர் பரிசீலிப்பார்.

விசாரணைக்குப் பிறகு

விசாரணைக்குப் பிறகு, உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டதா என்பதை IRB-RPD தெரிவிக்கும். ஏற்கப்பட்டால், நிரந்தர வதிவிடத்திற்கு (permanent residence) நீங்கள் விண்ணப்பிக்கலாம். நிராகரிக்கப்பட்டால், மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு உங்களுக்கு இருக்கலாம். உங்கள் தெரிவுகள் என்ன என்பதை அறிய வழக்கறிஞர் அல்லது சட்டப் பிரதிநிதியிடம் பேசுங்கள்.

மூன்று அரசாங்க அமைப்புகளைச் சந்திக்கவும்

அகதிகள் தொடர்பாக மூன்று அரசாங்க அமைப்புகள் செயல்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு பொறுப்புகள் உள்ளன. இந்த அமைப்புகள் தனித்தனியானவை; அவை தானாகவே ஒன்றுக்கொன்று தகவல்களைப் பகிர்ந்துகொள்வதில்லை.

IRCC Immigration, Refugees and Citizenship Canada

கனடாவின் குடிவரவுத் திட்டங்களை நிர்வகிக்கிறது

கனடாவிற்குள் இருந்து கோரிக்கையைத் தொடங்கினால், உங்கள் விண்ணப்பம் IRCC-க்கே செல்கிறது. உங்கள் கோரிக்கை பரிந்துரைக்கத் தகுதியானதா என அவர்கள் முடிவு செய்து, தகுதியானால் IRB-RPD-க்கு அனுப்புவார்கள்.

  • வேலை அனுமதிப் பத்திரங்கள் (work permits)
  • இடைக்கால சுகாதாரக் காப்பீடு (Interim Federal Health)
  • நிரந்தர வதிவிட விண்ணப்பங்கள்
  • அகதி பாதுகாப்பு அடையாள ஆவணம் (RPID)
CBSA Canada Border Services Agency

கனடாவின் குடிவரவுச் சட்டங்களை அமல்படுத்துகிறது

நுழைவுத் துறைமுகத்தில் (தரை எல்லை, விமான நிலையம், கடல் துறைமுகம்) அல்லது தடுப்பு மையத்தில் இருந்து கோரிக்கையைத் தொடங்கினால், CBSA அதிகாரியிடம் தெரிவிக்கிறீர்கள். உங்களுடன் பேசிய பின், கோரிக்கை தகுதியானது என அவர்கள் முடிவு செய்து, அதை IRB-RPD-க்கு அனுப்புவார்கள்.

  • எல்லைகளைக் கட்டுப்படுத்துதல்; யார் நுழையலாம் என முடிவு செய்தல்
  • தங்க முடியாதவர்களை நாட்டிலிருந்து அகற்றுதல்
  • சில நிலைமைகளில் தடுப்புக் காவலில் வைத்தல்
IRB Immigration and Refugee Board of Canada

உங்கள் கோரிக்கை குறித்து முடிவெடுக்கிறது

IRCC அல்லது CBSA உங்கள் கோரிக்கையைப் பரிந்துரைத்த பிறகு, அதைப் பரிசீலித்து முடிவெடுக்கும் முக்கிய அமைப்பு IRB ஆகும். அதன் அகதி பாதுகாப்புப் பிரிவு (RPD) உங்களுக்கு அகதி பாதுகாப்பு கிடைக்குமா என்பதைத் தீர்மானிக்கிறது.

  • உங்கள் BOC படிவத்தையும் ஆவணங்களையும் வாசிக்கிறது
  • உங்கள் விசாரணையை நடத்துகிறது
  • கோரிக்கையை ஏற்பதா என முடிவு செய்கிறது
  • பிற பிரிவுகள்: RAD · ID · IAD
தடுப்புக் காவல்

உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாவிட்டால், நீங்கள் ஆபத்தானவர் என்று கருதினால், அல்லது நீங்கள் குடிவரவுச் சட்டங்களைப் பின்பற்ற மாட்டீர்கள் என்று நம்பினால், CBSA உங்களைத் தடுப்பு மையத்தில் வைக்கலாம். தடுப்புக் காவலில் வைக்கப்பட்டால், வழக்கறிஞர் அல்லது சட்டப் பிரதிநிதியைப் பெறும் உரிமை உங்களுக்கு உண்டு. உங்கள் தடுப்புக் காவலை மறுஆய்வு செய்து, விடுவிக்க முடியுமா என்பதைத் தீர்மானிக்க வழக்கமான விசாரணைகள் நடைபெறும்.

உங்கள் முகவரியைப் புதுப்பித்து வையுங்கள்

முக்கியம்

உங்கள் முகவரி, தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி மாறினால், அதை ஒவ்வொரு அரசாங்க அமைப்புக்கும் தனித்தனியாகத் தெரிவிக்க வேண்டும்.

தகவல்களைப் புதுப்பிக்காவிட்டால், உங்கள் விசாரணைத் தேதி அல்லது உங்கள் கோரிக்கையின் முடிவு பற்றிய முக்கியமான கடிதங்கள் உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். IRCC, CBSA மற்றும் IRB ஆகிய மூன்றும் தனித்தனி அமைப்புகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

IRB-RPD உடன் முகவரியை மாற்ற

  • உங்களுக்கு சட்டப் பிரதிநிதி இருந்தால்: முகவரி, தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மாறியவுடன் அவரிடம் தெரிவியுங்கள். அவர் My Case மூலம் IRB-RPD-இல் உங்கள் தகவல்களைப் புதுப்பிப்பார்.
  • நீங்களே உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினால்: Notification of Client Contact Information படிவத்தை நிரப்பி, My Case மூலம் IRB-RPD-க்குச் சமர்ப்பியுங்கள். உங்களுக்கு இன்னும் My Case கணக்கு இல்லையென்றால், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும்.

IRCC உடன் முகவரியை மாற்ற

IRCC-இன் Webform-க்குச் சென்று, உங்கள் புதிய முகவரியைப் பதிவு செய்யும் படிகளைப் பின்பற்றுங்கள்.

  • “Type of application/enquiry” எனும் இடத்தில் “Change of contact information” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • உங்கள் UCI எண்ணை, உங்கள் Refugee Protection Identity Document-இல் அல்லது IRCC-இலிருந்து வந்த கடிதங்களில் காணலாம்.

CBSA உடன் முகவரியை மாற்ற

உங்கள் அகதி கோரிக்கையில் CBSA ஈடுபட்டிருந்தால், அவர்களிடமும் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும். எப்படி, எங்கு புதுப்பிப்பது என்பதை ஒரு அதிகாரி உங்களுக்கு அறிவுறுத்துவார்.

சுருக்கச் சொற்கள்

இந்த நடைமுறையில் அடிக்கடி கேட்கும் ஆங்கிலச் சுருக்கங்கள்:

IRCCImmigration, Refugees and Citizenship Canada

கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறை.

CBSACanada Border Services Agency

கனடா எல்லைச் சேவைகள் முகவர் அமைப்பு.

IRBImmigration and Refugee Board of Canada

குடிவரவு மற்றும் அகதிகள் சபை — முடிவெடுக்கும் சுயாதீன அமைப்பு.

RPDRefugee Protection Division

IRB-இன் பிரிவு; உங்கள் அகதி கோரிக்கையை விசாரித்து முடிவெடுக்கிறது.

RADRefugee Appeal Division

நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கான மேல்முறையீட்டுப் பிரிவு.

IDImmigration Division

தடுப்புக் காவல் மறுஆய்வு மற்றும் ஏற்புத்தன்மை விசாரணைகள்.

IADImmigration Appeal Division

குடிவரவு தொடர்பான சில மேல்முறையீடுகள்.

BOCBasis of Claim Form

உங்கள் கதையையும் காரணங்களையும் எழுதிச் சமர்ப்பிக்கும் முக்கிய படிவம்.

STCASafe Third Country Agreement

கனடா–அமெரிக்கா இடையிலான பாதுகாப்பான மூன்றாம் நாட்டு ஒப்பந்தம்.

RPIDRefugee Protection Identity Document

அகதி கோரிக்கையாளருக்கு வழங்கப்படும் அடையாள ஆவணம்.

UCIUnique Client Identifier

IRCC உங்களுக்கு வழங்கும் தனிப்பட்ட வாடிக்கையாளர் எண்.

IFHInterim Federal Health Program

கோரிக்கையாளர்களுக்கான இடைக்கால சுகாதாரக் காப்பீடு.

ஒரு முக்கியமான குறிப்பு: இந்தப் பக்கம் பொதுவான தகவல்களை மட்டுமே வழங்குகிறது; இது சட்ட ஆலோசனைக்கு மாற்றாக அல்ல. உங்கள் அகதி கோரிக்கை தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு முன், தகுதியான குடிவரவு வழக்கறிஞர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட குடிவரவு ஆலோசகரிடம் ஆலோசனை பெறுங்கள்.

அடுத்த கட்டம்

சட்டப் பிரதிநிதித்துவத்தைப் பெறுங்கள்.

உங்கள் கோரிக்கையில் சட்ட ஆலோசனை மிக முக்கியமானது. வழக்கறிஞர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட குடிவரவு ஆலோசகரின் உதவியை எவ்வாறு பெறுவது, Legal Aid எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை அடுத்த பக்கத்தில் அறியுங்கள்.

Office1225 Kennedy Rd, Scarborough, ON Openதிங்கள் – வெள்ளி · காலை 10:00 – மாலை 5:00 Emailinfo@puthiyakural.ca