Refugee Tamil Initiative · a project of the Center for Peace Canada இலவசம் · இரகசியம் · தமிழ் / English · 1225 Kennedy Rd, Scarborough, ON
அகதி தமிழ் Refugee Tamil · Center for Peace Canada உதவி பெற

முகப்பு வழிகாட்டி கோரிக்கையைத் தொடங்குதல்

கட்டம் 4

உங்கள் அகதி கோரிக்கையைத் தொடங்குங்கள்

கோரிக்கை எப்படித் தொடங்குகிறது, தொடங்கும் முன் என்ன தெரிந்திருக்க வேண்டும், என்ன ஆவணங்கள் சேகரிக்க வேண்டும், காத்திருக்கும் காலத்தை எப்படிப் பயன்படுத்துவது — முழுப் பயணத்தின் ஒரு பொது அறிமுகம்.

12 நிமிட வாசிப்பு

பொதுவான கேள்விகள்

கனடாவிற்கு வந்தவுடன், அல்லது ஏற்கனவே கனடாவில் இருக்கும் போது, நீங்கள் உங்கள் அகதி கோரிக்கையைத் தொடங்கலாம். உங்களுக்கு நிறையக் கேள்விகள் இருக்கலாம்:

எனது அகதி கோரிக்கையை எப்படித் தொடங்குவது?
இந்த நடைமுறை எவ்வளவு காலம் எடுக்கும்?
எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் என்ன நடக்கும்?
எனது குடும்பத்துடன் எப்போது சேர முடியும்?
எனக்கு உதவி எப்படிக் கிடைக்கும்?
எனது கதையை அவர்கள் நம்புவார்களா?
கவலைப்படாதீர்கள்

ஒவ்வொரு படியிலும் உங்களுக்கு உதவக்கூடிய பலர் இருக்கிறார்கள். இந்தப் பயணத்தின் எந்தக் கட்டத்திலும் இந்த இணையதளத்திற்குத் திரும்பி வரலாம்.

தொடங்கும் முன் எட்டு விடயங்கள்

01

உங்கள் தெரிவுகளை அறிந்துகொள்ளுங்கள்

கோரிக்கையைத் தொடங்கும் முன் தகவல்களைச் சேகரித்து, சட்ட ஆலோசனை பெறுங்கள். அகதி கோரிக்கைதான் உங்களுக்குச் சிறந்த வழியா, இந்த முடிவு உங்கள் எதிர்காலத்தை எப்படிப் பாதிக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

02

அவசரப்படாதீர்கள்

BOC படிவத்தை நிதானமாக, நேரம் எடுத்துச் செய்யுங்கள். நீங்கள் ஒரு அகதி என்பதைக் காட்டும் உங்கள் வாழ்க்கையின் முக்கியமான சம்பவங்கள் அனைத்தும் அதில் இடம்பெற வேண்டும்.

03

உங்களைப் பேணிக்கொள்ளுங்கள்

அகதி கோரிக்கை செய்வது கடினமான உழைப்பு. ஒரு நேரத்தில் ஒரு படி. உங்கள் உடல் மற்றும் மன நலனைக் கவனிக்க மறக்காதீர்கள்.

04

ஒழுங்காக வைத்திருங்கள்

இந்த நடைமுறையில் பல ஆவணங்கள் உங்களுக்கு வரும். பல பிரிவுகள் உள்ள ஒரு கோப்புறையை (file folder) வாங்கி, இப்போதே பயன்படுத்தத் தொடங்குங்கள்.

05

நகல்கள் எடுத்துப் பாதுகாக்கவும்

அரசாங்க ஆவணங்களை — காலாவதியானவை உட்பட — வைத்திருங்கள். சில வேளைகளில் உங்களுக்கோ உங்கள் சட்டப் பிரதிநிதிக்கோ அவை தேவைப்படும்.

06

தகுதி நேர்காணலுக்குத் தயாராகுங்கள்

உங்கள் கதையைச் சொல்லும் முன் தயாராகுங்கள். கோரிக்கை முழுவதும் உங்கள் கதை ஒரே மாதிரியாக இருப்பது முக்கியம். ஏதேனும் தவறு நேர்ந்தால் அல்லது ஏதாவது விடுபட்டால், அதை உங்கள் சட்டப் பிரதிநிதியிடம் சொல்லுங்கள்.

07

உங்கள் கதையைச் சொல்லுதல்

CBSA அதிகாரிகள், IRCC அதிகாரிகள், உங்கள் சட்டப் பிரதிநிதி, விசாரணையில் IRB-RPD உறுப்பினர் — பலரிடம் பலமுறை உங்கள் கதையைச் சொல்ல நேரிடும். பதற்றமாக இருக்கலாம். நேர்மையாகவும், முடிந்தவரை ஒரே மாதிரியாகவும் சொல்லுங்கள்.

08

நண்பர்கள், உறவினர்களின் ஆலோசனை

சட்ட ஆலோசனை உங்கள் சட்டப் பிரதிநிதியிடமிருந்தே வர வேண்டும். அகதி கோரிக்கை செய்த உறவினர்கள், நண்பர்களின் ஆலோசனை உங்களுக்குப் பொருந்தாமல் போகலாம் — ஒவ்வொரு கோரிக்கையும் வேறுபட்டது. சட்டப் பிரதிநிதி இல்லையென்றால், நம்பகமான குடியேற்ற உதவியாளரிடம் (settlement worker) தகவல் கேளுங்கள்.

உங்கள் தகவல்களைத் தயார் செய்யுங்கள்

உங்கள் கதையை எழுதுங்கள்

உங்களுக்கு என்ன நடந்தது, ஏன் திரும்பிச் செல்லப் பயப்படுகிறீர்கள் என்பதை எழுதி வைப்பது உதவியாக இருக்கும். ஆரம்பம் முதல் இறுதி வரை காலவரிசைப்படி ஒழுங்குபடுத்தி, முடிந்தவரை தேதிகளைச் சேர்க்கவும். இது உங்கள் கோரிக்கைக்கான முக்கியமான ஆதாரங்களை அடையாளம் காண உதவும். தொடர்புடைய ஒவ்வொரு விவரத்தையும் சேர்க்கவும்; முக்கியமான எதையும் விட்டுவிடாதீர்கள்.

முக்கியம்

தகவல்களை மறைப்பதையோ, விசாரணையின் போது புதிய விவரங்களை முதன்முறையாகச் சொல்வதையோ IRB-RPD சாதகமாகப் பார்க்காமல் போகலாம்.

ஆதாரங்களைச் சேகரியுங்கள்

உங்கள் கோரிக்கைக்கு ஆதரவான ஆதாரங்களைச் சேகரிப்பது முக்கியம். உங்களுக்கு நடந்ததை IRB-RPD நம்பவும், உங்கள் நாட்டின் நிலைமையையும் நீங்கள் ஏன் திரும்பிச் செல்ல முடியாது என்பதையும் புரிந்துகொள்ளவும் ஆதாரங்கள் உதவுகின்றன. சில எடுத்துக்காட்டுகள்:

  • நீங்கள் யார் என்பதை நிரூபிக்கும் ஆவணங்கள்
  • உங்களுக்கு நடந்தது உண்மை என்பதைக் காட்டும் ஆதாரங்கள்
  • உங்கள் நாட்டின் நிலைமையையும், அங்கு உங்களுக்கு ஏன் ஆபத்து என்பதையும் காட்டும் ஆவணங்கள் அல்லது செய்தி அறிக்கைகள்
  • உங்கள் கதை உண்மை என்று சொல்லக்கூடியவர்களின் கடிதங்கள் அல்லது பிரமாணப் பத்திரங்கள் (affidavits)
  • உங்கள் நாட்டில் அரசாங்க அமைப்பிடம் நீங்கள் உதவி கோரினீர்கள் என்பதைக் காட்டும் அறிக்கைகள்

உங்கள் சொந்த நாட்டிலிருந்து தேவையானவற்றை முடிந்தவரை விரைவாகப் பெற முயலுங்கள். பொலிஸ் அல்லது மருத்துவமனை அறிக்கைகளைப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகலாம். ஏதேனும் ஒன்றைப் பெற முடியவில்லை என்றால், அதைப் பெற நீங்கள் எப்படி முயற்சித்தீர்கள் என்பதைப் பதிவு செய்து வையுங்கள்.

ஆவணங்களைச் சரிபாருங்கள்

உங்கள் ஆதாரங்கள் அனைத்தையும் வாசித்து, தவறுகள் உள்ளதா எனப் பார்ப்பது முக்கியம். உங்களுக்காக ஒருவர் எழுதிய ஆதரவுக் கடிதம், உங்கள் BOC படிவத்தில் உள்ள தகவல்களுடன் பொருந்தாமல் இருக்கலாம். அப்படியானால், விசாரணையில் விளக்கும் வகையில் அதை எழுதியவருடன் பேச வேண்டியிருக்கலாம். என்ன செய்வது என்பதை உங்கள் சட்டப் பிரதிநிதியிடம் கேளுங்கள். உங்கள் கதையின் முக்கியமான பகுதிகள் அனைத்தையும் IRB-RPD நம்புவது மிக முக்கியம்.

அனைத்து ஆவணங்களையும் மொழிபெயருங்கள்

அனைத்து ஆதாரங்களும் ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். இதற்கு நேரம் எடுக்கும் — முடிந்தவரை விரைவில் தொடங்குங்கள். எவற்றை மொழிபெயர்க்க வேண்டும் என்பதை உங்கள் சட்டப் பிரதிநிதியிடம் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

ஆவணக் கோப்பு — சரிபார்ப்புப் பட்டியல்

உங்கள் ஆவணங்கள் அனைத்தின் நகல்களையும் வைத்திருங்கள். ஒரு கோப்புறையை வாங்கி, அனைத்தையும் ஒரே இடத்தில், பாதுகாப்பாக வையுங்கள். கனேடியக் குடியுரிமை பெறும் வரை உங்கள் ஆவணங்களை வைத்திருங்கள்.

My document folder · எனது ஆவணக் கோப்பு

0 / 10

நீங்கள் தேர்ந்தெடுப்பவை இந்தச் சாதனத்தின் உலாவியில் மட்டுமே சேமிக்கப்படுகின்றன — எங்களுக்கோ அரசாங்கத்திற்கோ அனுப்பப்படுவதில்லை. பொது அல்லது பகிரப்பட்ட கணினியைப் பயன்படுத்தினால், முடிந்ததும் “அழித்து மீண்டும் தொடங்க” என்பதை அழுத்துங்கள்.

முகவரி

உங்கள் முகவரியை எப்போதும் புதுப்பித்து வையுங்கள் — IRCC, CBSA மற்றும் IRB ஆகிய மூன்றிலும் தனித்தனியாக. இல்லையென்றால், உங்கள் கோரிக்கை பற்றிய முக்கியமான தகவல்கள் உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம்.

உங்கள் வழக்கறிஞர் அல்லது சட்டப் பிரதிநிதியுடன் வேலை செய்தல்

அகதி கோரிக்கை நடைமுறை சிக்கலானது. இந்த நடைமுறையில் வழிகாட்ட ஒரு சட்டப் பிரதிநிதி உங்களுக்கு உதவ முடியும்.

01

சான்றளிக்கப்பட்டவரை மட்டும் தேர்ந்தெடுங்கள்

உண்மையான வழக்கறிஞர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட குடிவரவு ஆலோசகர் அல்லாதவர்கள் உதவுவதாகச் சொல்லலாம் — கவனமாக இருங்கள். உங்கள் பகுதியில் legal aid கிடைத்தால் அதற்கு விண்ணப்பியுங்கள்.

02

நேர்மையாக இருங்கள்

உங்கள் சட்டப் பிரதிநிதியிடம் எதையும் மறைக்காதீர்கள். தகவல்களை மறைத்தால் அவரால் உங்களுக்கு உதவ முடியாது. அவர்தான் உங்கள் வழிகாட்டி.

03

தயாராகச் செல்லுங்கள்

ஒவ்வொரு சந்திப்புக்கும் முன் கேள்விகளைப் பட்டியலிடுங்கள், அல்லது முன்கூட்டியே மின்னஞ்சலில் அனுப்புங்கள். இது உங்கள் நேரத்தை நன்கு பயன்படுத்த உதவும்.

04

இது உங்கள் கோரிக்கை

சட்டப் பிரதிநிதி இருந்தாலும், விசாரணைக்கு முந்தைய ஒவ்வொரு படியிலும் நீங்கள் ஈடுபட வேண்டும். காலக்கெடுக்களைக் கவனித்து வையுங்கள் — ஒன்றைத் தவறவிட்டால், நீங்கள் கோரிக்கையைக் கைவிட்டதாக IRB கருதலாம்.

05

நல்ல உறவைப் பேணுங்கள்

எத்தனை முறை சந்திப்பீர்கள், உங்கள் வழக்கு பற்றிய தகவல்களை எப்படிப் பெறுவீர்கள், எப்படித் தொடர்பில் இருப்பீர்கள் — இவற்றை ஆரம்பத்திலேயே பேசித் தெளிவுபடுத்துங்கள்.

06

அவர்களின் பங்கு என்ன

உங்கள் கோரிக்கை ஏற்கப்படுமா என்று அவர்களால் சொல்ல முடியாது; உறுதியளிக்கவும் முடியாது. அந்த முடிவை IRB-RPD உறுப்பினர் மட்டுமே எடுக்கிறார்.

07

மாற்றிக்கொள்ளும் உரிமை

உங்கள் சட்டப் பிரதிநிதி உதவியாக இல்லை என்று நீங்கள் கருதினால், அவரை மாற்றிக்கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு. நம்பக்கூடிய ஒருவரைக் கண்டறிவது முக்கியம்.

காத்திருப்புக் காலம்

காத்திருப்பது இந்த நடைமுறையின் இயல்பான பகுதி. விசாரணைக்காகவோ, முடிவு அறிவதற்காகவோ நீங்கள் காத்திருக்க நேரிடலாம். அந்தக் காலத்தை நன்றாகப் பயன்படுத்துங்கள்.

விசாரணைக்குத் தயாராகுங்கள்

  • IRB-RPD-இன் Hearing Ready Tour நிகழ்ச்சியில் பங்கேற்கவும் — விசாரணைக்கு எப்படித் தயாராவது, அன்று என்ன நடக்கும் என்பதை அறியலாம்; IRB ஊழியர்களைச் சந்தித்துக் கேள்விகள் கேட்கலாம்.
  • உங்கள் BOC படிவம், கதை, மற்றும் நீங்கள் அனுப்பிய ஆதாரங்களை மீண்டும் வாசியுங்கள்.
  • BOC, கதை, நேர்காணல் குறிப்புகள், ஆதாரங்கள், பிற ஆவணங்கள் (வெளிநாட்டு விசா விண்ணப்பங்கள் உட்பட) — இவற்றுக்கு இடையே பொருந்தாத தகவல்கள் உள்ளதா எனப் பாருங்கள். இருந்தால் சட்டப் பிரதிநிதியிடம் சொல்லுங்கள்; திருத்தங்களை IRB-RPD-க்கு அனுப்ப வேண்டியிருக்கலாம்.
  • உங்கள் நாட்டின் செய்திகளைத் தொடர்ந்து கவனியுங்கள். உங்கள் கோரிக்கை தொடர்பான ஏதேனும் நடந்தால், சட்டப் பிரதிநிதியிடம் தெரிவியுங்கள்.

உங்கள் வாழ்க்கையை நிலைப்படுத்துங்கள்

  • ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழியை மேம்படுத்துங்கள்
  • வேலை தேடுங்கள்
  • உடல் ரீதியாகச் சுறுசுறுப்பாக இருங்கள்
  • சமூகத்தில் தன்னார்வத் தொண்டு செய்யுங்கள்
  • புதிதாக வந்தவர்களின் குழுவில் இணையுங்கள்
  • உங்கள் அயலவர்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

தேவையான ஆதரவைப் பெறுங்கள்

குடியேற்ற உதவி அமைப்புகள்

வேலை தேடுவது, வீடு பெறுவது, மொழி வகுப்புகளைக் கண்டறிவது, பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பது, அகதி கோரிக்கையாளர்களுக்கான இலவச சேவைகளை அறிவது — இவற்றுக்கு ஒரு settlement agency அல்லது சமூக சேவை அமைப்புடன் தொடர்பு கொள்ளுங்கள்.

இடைக்கால சுகாதாரத் திட்டம் (IFHP)

அகதி கோரிக்கையாளராக, Interim Federal Health Program மூலம் உங்களுக்குச் சுகாதார சேவைகள் கிடைக்கும்:

  • மருத்துவமனை சேவைகள்
  • மருத்துவ நிபுணர்களின் சேவைகள்
  • கண் பரிசோதனை மற்றும் அவசர பல் சிகிச்சை
  • மருந்துச் சீட்டு மருந்துகள்

வழக்கமான சுகாதாரக் காப்பீடு கிடைக்கும் வரை, அல்லது நீங்கள் கனடாவை விட்டு வெளியேற வேண்டிய நிலை வரும் வரை, இது தொடரும்.

மன நல ஆதரவு

இந்த நடைமுறையின் போது மன அழுத்தம் ஏற்படலாம். உங்கள் சொந்த நாட்டில், கனடாவிற்கான பயணத்தின் போது, அல்லது இங்கேயே நீங்கள் கடினமான அனுபவங்களைச் சந்தித்திருக்கலாம். கனடாவில் உங்களுக்கு உதவக்கூடிய சேவைகள் உள்ளன; IFHP இதற்குச் சில உதவிகளை வழங்குகிறது. ஆதரவு கேட்பது பலவீனம் அல்ல.

புதிய நட்புகள்

மற்ற அகதி கோரிக்கையாளர்களையும் புதிதாக வந்தவர்களையும் சந்திக்க முயலுங்கள். இதே நிலைமையைக் கடந்து செல்பவர்களுடன் அனுபவங்களைப் பகிர்வது உதவியாக இருக்கும். முடிந்தால், சொந்த நாட்டில் உள்ள குடும்பத்துடனும் நண்பர்களுடனும் தொடர்பில் இருங்கள்.

உங்கள் விசாரணை நாள்

உங்களைப் பேணுங்கள்

விசாரணைக்கு முந்தைய நாள் உங்களைக் கவனித்துக்கொள்ளுங்கள் — உதாரணமாக, போதுமான தூக்கம்.

கேள்விகளை எதிர்பாருங்கள்

உங்கள் கோரிக்கை பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தயாராக இருங்கள். உதாரணமாக, உள்நாட்டுக் கோரிக்கையை ஏன் இன்னும் முன்னதாகச் செய்யவில்லை எனக் கேட்கப்படலாம்.

உறுப்பினரும் ஒரு மனிதர்

உங்கள் கோரிக்கையை IRB-RPD உறுப்பினர் தீர்மானிக்கிறார். ஒவ்வொரு உறுப்பினரும், ஒவ்வொரு கோரிக்கையும் வேறுபட்டவை — ஆனால் ஒவ்வொரு முடிவும் நியாயமானதாக இருக்க வேண்டும்.

இடைவேளை கேளுங்கள்

விசாரணையின் போது பதற்றமாகவோ உணர்ச்சிவசப்பட்டோ இருப்பது இயல்பு. கஷ்டமாக இருந்தால் இடைவேளை கேட்கலாம். இது கடினமான பேச்சு என்பதைப் புரிந்துகொள்ளும் பயிற்சி உறுப்பினருக்கு உண்டு.

நேரடியாகப் பதிலளியுங்கள்

நேர்மையாகப் பதிலளியுங்கள். ஒருபோதும் பதிலைக் கற்பனையாக உருவாக்காதீர்கள். தெரியாவிட்டால், அல்லது உறுதியாகத் தெரியாவிட்டால், அப்படியே சொல்லுங்கள்.

கேள்வி புரியவில்லையா?

புரியாத கேள்விக்குப் பதில் சொல்ல முயலாதீர்கள். புரியவில்லை என்று உறுப்பினரிடம் சொல்லி, வேறு விதமாகக் கேட்கும்படி கேளுங்கள்.

மொழிபெயர்ப்பாளருடன் வேலை செய்தல்

உங்கள் மொழியிலும் பேச்சு வழக்கிலும் ஒரு தொழில்முறை மொழிபெயர்ப்பாளரை IRB-RPD இலவசமாக ஏற்பாடு செய்யும். உங்களுக்கு ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு தெரிந்திருந்தாலும், தவறுகளைத் தவிர்க்க மொழிபெயர்ப்பாளர் இருப்பது நல்லது.

  • விசாரணை தொடங்கும் முன், மொழிபெயர்ப்பாளருடன் பேசி, ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்கிறீர்களா என உறுதிப்படுத்துங்கள்.
  • மொழிபெயர்ப்பாளர் சொல்வது புரியவில்லை என்றால், அல்லது ஒரு தவறை நீங்கள் கவனித்தால், உடனடியாக உறுப்பினரிடம் தெரிவியுங்கள்.
  • விசாரணையின் போது பேசும்போது, மொழிபெயர்ப்பாளருக்கு வசதியாகக் குறுகிய வாக்கியங்களில் பேசுங்கள்.

காணொளி விசாரணைகள்

பெரும்பாலான அகதி விசாரணைகள் காணொளி மூலம் (videoconference) நடைபெறுகின்றன. உங்களுக்குத் தேவைப்படுவது:

  • நம்பகமான, பாதுகாப்பான, வேகமான இணைய இணைப்பு
  • வேலை செய்யும் கமெரா உள்ள கணினி, டேப்லெட் அல்லது சாதனம்
  • அமைதியான, தனிமையான இடம்
தெரிந்துகொள்ளுங்கள்

தனிமையான இடமோ, பயன்படுத்தக்கூடிய கணினியோ உங்களிடம் இல்லையென்றால், IRB-RPD அலுவலகத்தில் உள்ள கணினியையும் அறையையும் பயன்படுத்தக் கேட்கலாம். நேரில் நடக்கும் விசாரணை உங்களுக்குப் பொருத்தமானது எனக் கருதினால், அதையும் IRB-RPD-இடம் கோரலாம்.

விசாரணைக்குப் பிறகு

முடிவு

விசாரணையின் இறுதியில் உறுப்பினர் உங்கள் கோரிக்கை பற்றி முடிவெடுக்கலாம். மேலும் நேரம் தேவைப்பட்டால், முடிவு பின்னர் உங்களுக்கு அனுப்பப்படும். முடிவுக்காகக் காத்திருப்பது மன அழுத்தமாக இருக்கலாம் — ஆனால் தாமதம் என்பது உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படும் என்று அர்த்தமல்ல.

முடிவுக்கான காரணங்களுடன் கூடிய எழுத்துப்பூர்வ Notice of Decision-ஐ IRB-RPD அனுப்பும்.

  • சட்டப் பிரதிநிதி இருந்தால்: Notice of Decision அவருக்கு My Case மூலம் அனுப்பப்படும்; அவர் அதை உங்களுடன் பகிர்வார்.
  • நீங்களே பிரதிநிதித்துவப்படுத்தினால்: My Case மூலம் நேரடியாக உங்களுக்கு அனுப்பப்படும். உங்களுக்கு இன்னும் My Case இல்லையென்றால், தபாலில் அனுப்பப்படும்.

கோரிக்கை நிராகரிக்கப்பட்டால்

உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், சட்டரீதியான வேறு தெரிவுகள் இருக்கலாம். உங்கள் சட்டப் பிரதிநிதியிடம் உடனே பேசுங்கள் — மேல்முறையீட்டுக்கான காலக்கெடு குறுகியதாக இருக்கலாம்.

நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பியுங்கள்

உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டால், உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் நிரந்தர வதிவிடத்திற்கு (permanent residence) உடனடியாக விண்ணப்பியுங்கள். தாமதித்தால், வேலை அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பிக்க வேண்டி வருவது போன்ற சிக்கல்கள் ஏற்படலாம்.

நினைவில் கொள்ளுங்கள்

உங்களுக்கு அகதி பாதுகாப்பு கிடைத்த பிறகு, உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்ல முடியாது. அப்படிச் சென்றால், அரசாங்கம் உங்கள் கோரிக்கையை மற்றொரு விசாரணைக்காக IRB-RPD-க்குத் திருப்பி அனுப்பலாம்.

ஒரு முக்கியமான குறிப்பு: இந்தப் பக்கம் பொதுவான தகவல்களை மட்டுமே வழங்குகிறது; இது சட்ட ஆலோசனைக்கு மாற்றாக அல்ல. உங்கள் கோரிக்கை தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு முன், தகுதியான குடிவரவு வழக்கறிஞர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட குடிவரவு ஆலோசகரிடம் ஆலோசனை பெறுங்கள்.

அடுத்த கட்டம்

அகதி விசாரணைக்குத் தயாராகுங்கள்.

விசாரணைக்கு முன் தேவையான ஆவணங்கள், ஆதாரங்கள் மற்றும் தயாரிப்புகள் பற்றிய விரிவான தகவல்களை அடுத்த பக்கத்தில் அறியுங்கள். உதவி தேவைப்பட்டால், எங்கள் அலுவலகத்தில் தமிழில் பேசக்கூடிய ஒருவர் உங்களுடன் அமர்ந்து விளக்குவார்.

Office1225 Kennedy Rd, Scarborough, ON Openதிங்கள் – வெள்ளி · காலை 10:00 – மாலை 5:00 Emailinfo@puthiyakural.ca